Monday 18 January 2016

புதுகோட்டையை ஆண்ட மன்னன் பல்லவராயன் வன்னியனே

சிவந்தெழுந்த பல்லவராயன் 

=================================
சிவந்தெழுந்த பல்லவராயன் உலா என்ற நூலிலும், புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகளிலும் "சிவந்தெழுந்த பல்லவராயனைப்" பற்றியும் அவனது முன்னோர்களைப் பற்றியும் அறியமுடிகிறது. அதில் அவர்கள் "பல்லவர்" வழிவந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் சேகரித்த சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவினை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் முனைவர் இரா. நாகசாமி அவர்கள் கல்வெட்டு காலாண்டிதழில் வெளியிட்டுள்ளார்கள்.



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோகர்ணம், குடுமியான்மலை, திருவரங்குளம் முதலிய ஊர்களில் இப் பல்லவராயர்களைப் பற்றிய கல்வெட்டுகளை காணமுடிகிறது. சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவின் பாட்டுடையத் தலைவனான "மல்லை சிவந்தெழுந்த பல்லவன்" தன்னை சோழர், பாண்டியர் ஆகிய இரண்டு குடிகளுடனும் தொடர்பு உடையவன் என்று குறிப்பிடுகிறான். ஐயடிகள் காடவர் கோனும், காடவர் கோன் கழற்சிங்கப் பல்லவனும் இவனது முன்னோர்கள் என்று குறிப்பிடுகிறான். மேலும் இவனது முன்னோர்கள் தில்லையிலும் (சிதம்பரம்), காவிரிப் பூம்பட்டினத்திலும் பல்லவனீச்சுவரத்தை தோற்றுவித்தவர்கள் என்பதை உலாவின் மூலம் அறியமுடிகிறது :-

"சூடுமுடிக் காடவர்கோன் பல்லவனுங் கட்டுகழற்
சிங்கரெனப் பாடியதொண் தத்தொகையிற் பல்லவனும்" (சி.ப.உலா, பாடல் - 19).
கலிங்கத்துப் பரணியில் புகழ்பெற்ற "கருணாகரத் தொண்டைமானும்", ஒட்டக்கூத்தனால் பரணியில் பாடப்பெற்ற "திருச்சிற்றம் பலமுடையான் பெருமானம்பி பல்லவராயனும் "சிவந்தெழுந்த பல்லவராயனின் முன்னோர்கள் ஆவர் :-
"தேரிய காவிரி நாடன் கலிங்கத் தமிழ்பரணி 
பாவினில் வீறுமொழிப் பல்லவனும்" (சி.ப.உலா, பாடல் - 24).
"மூவருலா பாத்தன் தமிழினுமுன் பாடும் பரணியினும்
கூத்தன் கவிகொண்ட கொற்றவனும்" (சி.ப.உலா, பாடல் - 25).
சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில், பல்லவராயர்கள் "பதினெட்டு வன்னியர் கண்டன்" என்றும் "பல்லவர் கோன்" என்றும் குறிப்பிடப்படுகிறார்கள் :-
"கருந்துளப மாமா லைதினெட்டு வன்னியர்கண் டன்
பனுவற் பாமாலை மாலையிட்ட பல்லவர் கோன்"
(சி.ப.உலா, பாடல் - 40).

பல்லவராயர்கள் தங்களை "சம்பு பல்லவன்" (சம்பு குல பல்லவன்) வழிவந்தவர்கள் என்பதனை சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் குறிப்பிட்டுள்ளார்கள் :-
"நிம்பமெனும் பல்லவமே சூட்டிமுடி பாலித் தரசிருந்து 
பல்லவதே சம்புரக்கும் பல்லவனும்" (சி.ப.உலா, பாடல் - 9).
ஏகாம்பரநாதர் உலாவில் வரும் பல்லவனான சம்புவராய மன்னனை, சிவந்தெழுந்த பல்லவராயன் தன்னுடைய முன்னோர் என்று சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் குறிப்பிடுகிறான் :-

"நத்தமும்ப மெச்சியத் தத்துபரி மேலாநின் றேகம்பர்
கச்சியுலா வில்
வந்த காவலனும் (சி.ப.உலா, பாடல் - 26).
இரட்டைப் புலவர்களால் "கச்சி ஏகாம்பரேஸ்வரர்" மீது பாடப்பட்ட நூலே "ஏகாம்பரநாதர் உலாவாகும்". இவ்வுலாவில் சம்புவராய மன்னனான மூன்றாம் இராசநாராயண சம்புவராயன் (என்னும்) திருமல்லிநாதன் (கி.பி. 1356 - 1379), ஏகாம்பரேஸ்வரருக்கு அளித்த பல கொடைச் சிறப்பை பற்றி இரட்டை புலவர்கள் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அவை :-
"உள்ளமகிழ் செம்பதுமை கேள்வன் திருமல்லிநாதனுயர் சம்புபதி நல்கும் தடந்தேர்போல்" (ஏ.நா.உலா, பாடல் - 146).
"தனக்கமையச் சம்புகுலத் தொருவன் சாத்துகைக்காம் என்றளித்த செம்பொன் மணிமகுடம் சேர்வித்தும்" (ஏ.நா.உலா, பாடல் - 61).

"விருப்பால் வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லிநாதன்
கொடுத்த திருத்தேர்மேற் கொண்டு" (ஏ.நா.உலா, பாடல் - 102).

"திங்கள் முடித்த முடிக்கு முடிகொடுத்த சம்பன்
படைத்ததுலா
மண்டபமும் பார்த்து" (ஏ.நா.உலா, பாடல் - 321).

"வெஞ்சமரில் தத்துபரி பல்லவன் சம்பு குலப் பெருமாள் வைத்த துலாபார மண்டபத்தும்" (ஏ.நா.உலா, பாடல் - 161).

சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் குறிப்பிடப்படும் சம்புவராய மன்னனை சிவந்தெழுந்த பல்லவராயன் தன்னுடைய வம்சத்தவனாக குறிப்பிடுகிறான். எனவே சிவந்தெழுந்த பல்லவராயன் "வன்னிய குலத்தில்" தோன்றியவன் என்பது உறுதியாகிறது.
சிவந்தெழுந்த பல்லவராயன் தன்னை "ஆளப்பிறந்த அரசர் கோன்" என்றும் "கூடலர் கோன்" என்றும் குறிப்பிடுகிறான். இது "வன்னிய குல க்ஷத்திரிய அரசர்களான "காடவராயர்களை" குறிப்பிடுவதாகும்.

புதுக்கோட்டை பகுதியில் "பல்லவராயர்கள்" பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றும், கி.பி. 1378 ஆம் ஆண்டு முதலே அவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் காணக்கிடைக்கிறது என்று தமிழ்நாடு தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் "குடுமியான்மலை" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். பல்லவராயர்கள் புதுக்கோட்டை பகுதியில் பல கோயில்களுக்கும் செய்துள்ள கொடைகளை கூறும் கல்வெட்டுகளைக் கொண்டு இவர்களது ஆட்சிப் பரப்பினையும், அவர்கள் இன்னார் என்பதனையும் அறிந்து கொள்ளவும் முடிகிறது என்று முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் அவர் குறிப்பிடுவது என்னவென்றால், சிவந்தெழுந்த திருமலை ராஜ பல்லவராயன் என்பவன் கி.பி. 1539 இல் ஆட்சி ஆண்டவன் (I.P.S. No. 752). இவனுக்கு அடுத்து அச்சுதப் பல்லவராயனும், இவன் மகன் மல்லப்ப பல்லவராயனும் (மல்லப்ப நாயக்கப் பல்லவரையர், I.P.S. No. 906) ஆண்டனர். அச்சுதப் பல்லவராயன் மதுரை திருமலை நாயக்கனின் சமகாலத்தவன். மல்லப்ப பல்லவராயரின் மகள் வழிப்பேரனே "சிவந்தெழுந்த பல்லவராயன்". இவன் பல்லவராயர் மரபில் இறுதியாக ஆண்ட சிறந்த மன்னன் ஆவான்.
இவன் காலத்தில் குடுமியான்மலைக் கோயிலில் பல திருப்பணிகள் செய்தான், மலர்வனங்கள் வைத்தான் என்றும் வரலாறு கூறும். இவன் பெயரில் உலாவும், பிள்ளைத் தமிழும் அக் காலத்தில் எழுந்தன. சிறந்த சிவபக்தனான இவனை ராமநாதபுரம் சேதுபதியான கிழவன் சேதுபதியின் மகன் காளையார் கோயிலுக்கு அருகில் கந்ததேவி என்னும் இடத்தில் எதிர்பாரத விதமாகத் தாக்கிக் கொன்றான்.

சிவந்தெழுந்த பல்லவராயன் மறைந்த பிறகு இதே பகுதியை தொண்டைமான்களுக்குக் கொடுத்து ஆள ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. இவர்களும் பல்லவராயர்களைப் போன்று தொண்டை மண்டலத்திலிருந்து வந்தவர்களே. யானைப் பிடிப்பதில் திறமை சாலியாக இருந்த இவர்கள் புதுக்கோட்டை பகுதியில் வந்து குடியேறினர். இவர்கள் "கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்" என்று முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையால் 1981 இல் வெளியிடப்பெற்ற "குடுமியான்மலை" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட சான்றுகளில் இருந்து தெரியவரும் கருத்து என்னவென்றால் :-
க்ஷத்திரிய மரபில் வந்த அரசர்களான "பல்லவராயர்கள்" புதுக்கோட்டை பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள் ஆவர். வன்னிய குல க்ஷத்திரிய அரசனான சிவந்தெழுந்த பல்லவராயனை மறவர் வம்சத்து கிழவன் சேதுபதியின் மகன் கொலை செய்தான். இக் கொலைக்கான காரணம், மறவர் வம்சத்து சூரைக்குடி தலைவர்களை சிவந்தெழுந்த பல்லவராயன் வென்றதின் காரணமாக இருக்கலாம்.

சிவந்தெழுந்த பல்லவராயன் தன்னை (பாடல் - 37) "சூரைக்குடி கவர்ந்த தூயோனும்" என்று குறிப்பிடுகிறான். அதாவது "சூரைக்குடி தலைவர்களான மறவர்களை வென்ற தூயவன்" என்று தன்னை குறிப்பிடுகிறான்.
திருமெய்யம் வட்டம், நெய்வாசல், அகத்தீஸ்வரர் கோயிலில் இருக்கும் விஜயநகர் காலத்து கல்வெட்டு ஒன்றில், சூரைக்குடி அரசுபள்ளிகொண்ட பெருமாள் விசையாலைய தேவர் குமாரர் வயிரவ நயினார் விசையாலைய தேவர் அவர்கள், "பதிநெட்டு வன்னியரை முதுவுபுறம் கண்டன்" என்று தெரிவிக்கிறார். பல்லவராயர்கள் தங்களை "பதினெட்டு வன்னியர் கண்டன்" என்று சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் குறிப்பிடுகிறார்கள். எனவே அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு குறிப்பிடும் "பதினெட்டு வன்னியரை முதுவுபுறம் கண்டான்" என்பது பல்லவராயர்களை சூரைக்குடி அரசர்கள் வென்றதின் காரணமாக இருக்கலாம். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி போர் நிகழ்ந்திருக்கவேண்டும்.
சிவந்தெழுந்த பல்லவராயன் கொல்லப்பட்ட பிறகு, ராமநாதபுரம் சேதுபதியின் உறவினர்களான "கள்ளர் குல தொண்டைமான்களுக்கு", சிவந்தெழுந்த பல்லவராயன் ஆட்சி செலுத்திய "புதுக்கோட்டையை" ஆள ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. கள்ளர் வம்சத்து ரகுநாதராய தொண்டைமான் (கி.பி. 1686) அவர்களே புதுக்கோட்டையை முதன் முதலில் கள்ளர் வம்சத்தின் சார்பில் ஆட்சி செலுத்தியவர்கள் ஆவர்.
புதுக்கோட்டையை ஆட்சி செய்த வன்னிய குல பல்லவராயர்கள் "க்ஷத்திரியர்கள்" என்பதை முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் குடுமியான்மலை கல்வெட்டின் மூலம் தெரிவிக்கிறார்கள் :-
"கி.பி. 1615 ஆம் ஆண்டில் அச்சுதப் பல்லவராயனின் மகன் மல்லப்ப பல்லவராயன் வைத்தூர் சீமையை ஆண்டான். அக்கால் அவன் சிகாநல்லூர் வாசிகளிடம் 30 பொன்னுக்கு நிலம் வாங்கி, அதைக் கோயிலுக்குக் கொடுத்து, கோயிலில் உள்ள அந்தணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இலவசமாக மனைநிலம் வழங்கும்படி ஆணையிட்டான்". (I.P.S. No. 866).

மல்லப்ப பல்லவராயர் அவர்கள் குடுமியான்மலை கோயிலில் உள்ள இறைவனுக்கு பூஜை செய்யும் "பிராமணர்களுக்கு" இலவசமாக மனைநிலம் வழங்கினார். அதைப்போலவே அவர், அக் கோயிலில் மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்த "சூத்திரர்களுக்கும்" இலவசமாக மனைநிலம் வழங்கினார் என்பதை குடுமியான்மலை கல்வெட்டு (கி.பி. 1615) குறிப்பிடுகிறது. பல்லவ வம்சத்து "க்ஷத்ரியரான" அரசர் மல்லப்ப பல்லவராயர், உயர்நிலையில் இருந்த "பிராமணர்களுக்கும்" கிழ்நிலையில் இருந்த "சூத்திரர்களுக்கும்" நிலதானம் வழங்கியுள்ளார்கள்.


சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் நிலவிய "நால் வருண" முறையானது (பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர்) கி.பி.17 ஆம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் நிலவியது என்பதற்கு குடுமியான்மலைக் கல்வெட்டு நமக்கு சான்றாக அமைகிறது.




இப்படி வாழ்வாங்கு வாழ்ந்த "புதுக்கோட்டை பல்லவராயர்கள்" காலத்தின் கோலத்தினால் அழிவுற்றாலும், அவர்களது வரலாறு, பராக்கிரமம் மற்றும் புகழானது தமிழக மக்களிடம் என்றென்றும் நிலைத்து வாழும்.
நன்றி 

ஆதார நூல்கள் : 
1) ஏகாம்பரநாதர் உலா 
2)சிவந்தெழுந்த பல்லவராயன் உலா 
3)குடிமியான் மலை 
4) Inscriptions of Pudukottai State (Arranged According to Dynasties)